சரத்பொன்சேகாவும்,ஊடகச்செயலாளரும் கைது
![]()
சரத்பொன்சேகாவும்,ஊடகச்செயலாளரும் கைது.
நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார்.இத்தகவலை
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.
இராணுவ குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே விசாரணைகளுக்காக இவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும் அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படை யாக வைத்தே விசாரணைகளை முன் னெடுப்பதற்காகவே இராணுவ பொலி ஸாரினால் சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டி ருக்கும் சரத் பொன்சேக்கா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப் பட்டதனையும் அவர் சுட்டிக்காட்டினார்
.இதேவேளை கொழும்புத்தகவல்களின்படிஅவருடன் கூடவே அவரது ஊடகச் செயலாளர் சேனகா டி சில்வாவும் கைது செய்யப்பட்டார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.இரகசிய இடம் ஒன்றில் வைத்த அவர் விசாரிக்கப்படுகிறார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது பொன்சேகா அவமானகரமாக நடத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.அவரைக் கைது செய்த படையினர் தனது கண்களுக்கு முன்னால் தரதரவென இழுத்துச் சென்றனர் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் 26ஆம் நாள் நடைபெற்ற குடியரசுத் தேர்தலில் 4 மில்லியன் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா 6 மில்லியன் வாக்குகள் பெற்ற அதிபர் ராஜபக்சவிடம் தோல்வி அடைந்தார்.
எனினும், தேர்தலில் தானே வெற்றி பெற்றார் என்றும் அது தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது என்றும் தேர்தல் முடிவுகளைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
குடியரசுத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையிலேயே அதிபர் ராஜபக்சவைக் கொல்ல பொன்சேகா முயன்றார் என்ற குற்றச்சாட்டு அரச தரப்பால் சுமத்தப்பட்டது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று தெரிவித்த பொன்சேகா தன்னைப் பழிவாங்குவதற்கான நடவடிக்கையே அது எனவும் கூறியிருந்தார்.
பொன்சேகாவின் சதி முயற்சி என்று அரசு கூறுவது தொடர்பில் அவர் மீது படைய விசாரணை நடத்துவதற்கான சட்ட ஆலோசனையை அரசு கேட்டிருந்தது.
இன்று பகல் பொழுதில் தனது கணவர் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை பொன்சேகாவின் மனைவி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட போது அவர் தனது அரசியல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
பொன்சேகா கைதுசெய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதைப் படம்பிடித்த, தமது மற்றும் AFP நிறுவனத்தின் படப்பிடிப்பாளர்களின் ஒளிப்படக் கருவிகள் படையினரால் பறித்து உடைக்கப்பட்டதாக டெய்லி மிரர் ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கைது திடீரென நடைபெற்ற நாடகம் என சம்பவத்தை வர்ணித்துள்ள பி.பி.ஸி. கொழும்பு செய்தியாளர் Charles Haviland. இது எதிர்க் கட்சிகளைப் பழிவாங்கும் பெரும் நடவடிக்கையின் ஆரம்பமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி எனவும் கூறி உள்ளார்.
பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கான காரணம் எதனையும் படை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று சம்பவத்தின் போது உடனிருந்த அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிறிலங்காப் படையினரின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் தான் அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாகச் சமர்ப்பிப்பதற்குத் தயாராகி வருகிறார் எனத் இன்று பகல் ஊடகவியலாளர்களிடம் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
“எனக்குத் தெரிந்ததை எல்லாம் - எனக்கு என்ன சொல்லப்பட்டதோ, நான் என்ன கேள்விப்பட்டேனோ அவற்றை நான் நிச்சயம் வெளியிடுவேன். யார் போர்க் குற்றங்களை இழைத்தார்களோ அவர்கள் நிச்சயம் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் பொன்சேகா.
