இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின்

பொதுத்தேர்தலும் இந்திய வம்சாவளித்தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும்.
எதிர்வரும் பாராளுன்றத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்கள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. 2004 ஆம்ஆண்டுஇடம்பெற்றபொதுத்தேர்தலில்இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிட்டதன் மூலம் கண்டி மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் மூவரும் பதுளை மாவட்டத்தில் இருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.அத்துடன் இ.தொ.கா.வுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக இரண்டு பாராளுன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணி ஒரு உறுப்பினரைப்பெற்றுக்கொண்டதோடு மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்து கொண்ட உடன்படிக்கை ஒன்றின் மூலமாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக ஒரு பாராளுன்ற உறுப்பினர் பதவியையும் பெற்றுக்கொண்டது.
அதே வேளை மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் மூலமாக மலையகத்தைச்சேர்ந்த ஒருவருக்கும் பாராளுன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்தது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் ஏணிச்சின்னத்தில் போட்டியிட்ட மேலக மக்கள் முன்னணி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப்பெற்றுக்கொண்டது. இதற்கேற்ப தற்போதைய கலைக்கப்படாத பாராளுமன்றத்தில் மலையகத்தமிழ் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 12 உறுப்பினர் பதவிகள் உள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ,அமரர் .பெ.சந்திரசேகரன் ,பிரதியமைச்சர்களான முத்துசிவலிங்கம் ,புத்திரசிகாமணி ,வடிவேல் சுரேஷ் ,பைசல் முஸ்தபா , பெ.ராதாகிருஷ்ணன் ,எஸ்.ஜெகதீஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.செல்லச்சாமி ,சச்சிதானந்தன் ,மனோகணேஷன் ,ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோராவார்.
இந்த நிலையில் இ.தொ.கா.வின் செல்வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட வடிவேல் சுரேஷ் ,பைசல் முஸ்தபா ,புத்திரசிகாமணி ஆகியோர் இ.தொ.கா.வின் கட்டுப்பாட்டையும் மீறி அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து கொண்டு பிரதியமைச்சர்களாக செயற்படுகின்றனர்.
பிரதியமைச்சர்களாக செயற்பட்ட எம்.எஸ்.செல்லச்சாமி ,சச்சிதானந்தன் ஆகியோர் தமது பிரதியமைச்சர் பதவிகளைத்துறந்து தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்களாக உள்ளனர். அமரர் .பெ.சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து அவரின் இடத்துக்குத்தேர்தல் ஆணையாளர் எஸ்.அருள்சாமியை நியமித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர்கள் மீண்டும் போட்டியிட்டோ தேசிய பட்டியல் மூலமாகவோ மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவார்களா என்ற கேள்வி இந்தியவம்சாவளி மலையகத்தமிழ் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபத்தேர்தலில் இந்தியவம்சாவளி மலையகத்தமிழ் மக்கள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப்போட்டியிட்ட எதிரணிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குப் பெருவாரியான வாக்குகளை அளித்தனர்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தற்போது பொதுத்தேர்தல் ஒன்றும் வரவுள்ளது. இந்தத்தேர்தலில்இந்தியவம்சாவளிமலையகத்தமிழ்மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எவ்வாறு போட்டியிட போகின்றன என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
இலங்கைத்தொழிலாளர் காஙிகரஸினைப்பொறுத்த வரையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடக்கூடிய நிலைமையே பெரும்பாலும் காணப்படுகின்றது.இவ்வாறு போட்டியிடுகின்ற போது இந்தக்கட்சியின் பொதுச்செயலாளர் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கலாமென்றும் அல்லது தனது ஆளுங்கட்சியின் பெயரைத்தேசிய பட்டியலில் இணைந்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு புதுமுகங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மலையக மக்கள் முன்னணி தனித்து அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடக்கூடிய நிலைமைக்காணப்படுகின்றது. அத்துடன் பெருந்தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ்,தொழிலாளர் விடுதலை முன்னணி, மலையகத்தேசியதொழிலாளர் சங்கம் போன்ற அமைப்புக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் மலையகத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற முக்கிய நபர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளதால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி ,தொழிலாளர் தேசிய முன்னணி,ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற அமைப்புக்கள் போட்டியிடவுள்ளன.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுததேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஒருவரையும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவரையும் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு பேரையும் பதுளை மற்றும்;; கொழும்பு மாவட்டத்தில் தலா மூன்று பேரையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவளி மலையகத்தமிழ் மக்கள் சார்பாக தெரிவு செய்து கொள்ளும் வகையில் இந்தியவம்சாவளி மலையகத்தமிழ் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் வியூகம் அமைக்க வேண்டும் என்பதே இந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.
