சிறுநீரகக்கற்கள்..
சிறுநீரகக்கற்கள் ( KIDNEY STONES)
உடலின் பல பாகங்களிலும் கற்கள் தோன்றலாம். ஆனால் பொதுவாக
சிறுநீரகக்கற்களே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுநீரகங்கள் முதுகுப்புறத்தில் விலா என்புகளுக்கு கீழே முதுகெலும்பின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காணப்படுகின்றது. இவையே உடலின் முக்கிய தொழிலான கழிவகற்றும் செயலில் பெரிதும் பங்கெடுக்கிறது. பொதுவாக 20-40 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களையே பெரிதும் பாதிக்கிறது.
நாம் போதியளவு நீர் அருந்தாத வேளையில் சிறுநீர் குறைவாக வெளியேறும். இதனால் உப்புக்களின் அளவு சிறுநீரில் அதிகரித்து நாளடைவில் கற்களாக மாறுகிறது.85 வீதமான கற்கள் கல்சியம் ஒக்சலேட் கற்களாகவே காணப்படுகிறது. மாமிசம் உண்பவர்கள் போதியளவு நீர் அருந்தாவிடில் யூரிக்கமிலத்தின் அளவு அதிகரித்து கற்கள் உற்பத்தியாகிறது. மேலும் பரா –தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்வதாலும் சிறுநீரில் வெளியேறும் கல்சியத்தின் அளவு அதிகரிக்கின்றது. கல்சியக் கற்களும் உருவாகிறது. புரதத்தின் அமிலோஅமிலங்களினால் சிஸ்டைன்(Cystine) எனப்படும் கற்கள் உருவாகிறது.
சிறுநீரகத் தொகுதியில் பெரும்பாலும் மேல் சிறுநீரகத்தொகுதியில் (Upper Urinary Traction) கற்கள் தோன்றுகின்றன. அதாவது சிறுநீரகத்தின் பகுதியில் ஏற்படுபவை. மற்றவை சிறுநீர்ப்பை ,சிறுநீர்வழி காணப்படும் கீழ் சிறுநீரகத்தொகுதியில்(Lower Urinary Traction) ஏற்படலாம்.
இவற்றின் அறிகுறிகள் ஏற்படும் இடத்தையும், அளவையும் பொறுத்தே வெளிப்படுகின்றன. பெரியகற்கள் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. நாள்செல்ல கீழ் முதுகில் நோ,வயிற்றுவலி என்பன காணப்படும். சிறுநீரகக்குழாயில் கற்கள் தோன்றினால் அதிக வலியை ஏற்படுத்தும். கல்லானது சிறுநீரகப்பாதையில் செல்லும் அசைவினால் கடுமையான நோ, சிலவேளை குமட்டல் ,வாந்தி என்பனவும் ஏற்படும். அதிகரிக்கும் இவ்வலியானது ஆண், பெண் குறிகளை நோக்கியும் பரவலாம். சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறும். அடிக்கடி சிறுநீர்கழித்தல் , கழிக்கும் போது எரிச்சல் என்பனவும் தோன்றலாம். மேலும் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால் தொற்று ஏற்படலாம். தொற்று காணப்பட்டால் காய்ச்சல் , நடுக்கம் , வயிற்றுவலி காணப்படும்.
சிறுநீரகக்கற்களை நோய்நிர்ணயம் செய்வதற்கு சாதாரணமாக சிறுநீர்பரிசோதனை, எஸ்ரே (X-ray KUB) இதில் 90 வீதமான கற்களைக்காணலாம். வயிற்றுப்பகுதியில் ஸ்கேன், RFT எனப்படும் சிறுநீரக தொழிற்பாட்டு பரிசோதனை என்பன பொதுவாக செய்யப்படுகிறது
மேலும் CT ( Computerized tomography) , IVP ( Intravenous pyelogram) என்பனவும் செய்து நோயை இலகுவில் கண்டறியக்கூடியதாகவுள்ளது.
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகளாக மருத்துவசிகிச்சையும், சத்திரசிகிச்சையும் செய்யப்படுகிறது. மருந்துவகைகள் சிறுநீருடன் கல்சியம் வெளியேறும் அளவைக் குறைப்பனவாயும் ,சிறுநீரில் அமில காரத் தன்மையை பேணியும் கற்களை தடைசெய்கிறது. சிஸ்டைன் கற்கள் தோன்றியபின் அதிகநீர் அருந்துவதால் பயன்கிடையாது. இவற்றிக்கும் Thiola, Cuprimineபோன்ற மருந்துகள் வைத்திய ஆலோசனைப்படி அருந்தலாம்
சத்திரசிகிச்சையில் Extracorporeal Schock Wave Lithotripsy (ESWL) முறையில் உடலுக்கு வெளியே இருந்தவண்ணம் அதிர்வலைகள் மூலமாக கற்கள் சிறுசிறு துணிக்கைகளாக உடைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இது இலகுவாக கற்களை அகற்றும் முறையாக பாவிக்கப்படுகின்றது. எனினும் பெரிய அளவிலான கற்களை அகற்ற Peretaneous Nephro Lithotomy முறை சிகிச்சை உதவுகின்றது. இதில் முதுகுப்புறமாக 1செ.மீ. அளவு துவாரமிடப்பட்டு சிறுநீரகபாதை வழியாக வீடியோகமரா பொருத்தப்பட்ட குழாய் மூலம் கற்கள் உடைத்து வெளியேற்றப்படுகிறது. Ureteroscope பாவித்தும் கற்கள் உடைத்து அகற்றப்படுகின்றன.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதால் காலப்போக்கில் சிறுநீரகம் ( Renal Failure) செயலிழக்கலாம்.மேலும் நுண்ணங்கி தொற்றும் வாய்ப்பு அதிகமாதலால் ( Acute pyelonephritis ஏற்படுகின்றது. சிறுநீரகங்களை சுற்றி சீழ்கட்டிகள் ( Renal abscess) தோன்றலாம்.நுண்ணங்கிகள் உடல் முழுதும் பரவி Spticamia நிலையை தோற்றுவிக்கலாம். இது அபாயகரமானநிலையாகும்.
